பிந்திய பதிவுகள்
Loading...
Thursday, March 3, 2016

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம், நாட்டு வைத்தியம் தான். உணவே மருந்து என்கிற அடிப்படையில் தான், நாட்டு மருத்துவ குறிப்புகள் அடங்கியுள்ளன.
எல்லாவித நோய்களுக்கும், மூலிகை ஒன்றையே தீர்வாக கொண்டிருப்பதால், பக்கவிளைவுகள் ஏதுமில்லை.
ஆனால், விஞ்ஞான வளர்ச்சியால் எழுந்த, ஆங்கில மருத்துவத்தில், எக்கச்க மருந்துகள் அறிமுகமாகின்றன. தலைவலி, காய்ச்சலுக்கு கூட, நூற்றுக்கணக்கான பெயர்களில், மருந்துகள் தயாரித்து, பர்சை காலியாக்குகின்றனர். இதில், ஒரு மருத்துவர் ஒருவிதமான மருந்தையும், வேறு மருத்துவர், வேறு விதமான மருந்தையும் பரிந்துரைக்கின்றனர்.
ஒரே ஆய்வுக்கு, ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்புகின்றன. ஆக மொத்தத்தில், ஆய்வுக்கு பயன்படுத்தும் சோதனைக்கூட எலிகளை போல, மனிதர்களாகி விட்டனர். இதனால், தற்போது மீண்டும் இயற்கை வழி மருத்துவத்தின் பக்கம் மக்களின் பார்வை திரும்பியுள்ளது. இயற்கை முறையில் வலிகளுக்கான மருத்துவ முறைகள் குறித்து காண்போம்.
தலைவலி: "தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்' என்பது பழமொழி. தலைவலி சிலருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு எப்பொழுதாவது வரும். இத்தலைவலியைப் போக்க, செஞ்சந்தனக் கட்டையை உரைத்து, நெற்றியில் பூசுவர். கரிசலாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து மூக்கிலிடலாம். கடுமையான இருமலும், தலைவலியும் சளியும் இருந்தால், காட்டுப் பகுதியில் மண்டிக் கிடக்கும், நொச்சி இலைகளைப் பறித்து வந்து, மண்சட்டியில் போட்டு, நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதிலிருந்து வரும் நீராவியை மூக்கு வழியாக உள்ளே இழுத்து, ஆவி பிடிக்கலாம். தலைவலிக்கு இதுபோன்ற எளிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு நலம் பெறலாம்.
காது வலி: ஐம்புலன்களில், காது மிக முக்கியமான உறுப்பாகும். காதில் ஏற்படும் வலியை போக்க, தேங்காய் எண்ணெயில் மிளகு, வெள்ளைப் பூண்டு போட்டுக் காய்ச்சி இளஞ்சூடாகக் காதில் ஊற்றினாலோ அல்லது வெங்காயத்தை பிழிந்து, காதில் விட்டாலோ காது வலி உடனடியாக குணமாகும்.
பல் வலி: பற்களில் ஏற்படும் வலியை போக்க வேப்பிலைக் கொழுந்து, மஞ்சள், திருநீறு இவற்றைச் சேர்த்து அரைத்து, வலியிருக்கும் பகுதியில் உள்ள கன்னத்தில் பூசினால், பல் வலி மற்றும் வீக்கம் குறையும். பூச்சி அரித்த பல்லில், சூடம் அல்லது கிராம்பு வைத்தால் குணமாகும். மிளகு, உப்பு ஆகியவற்றை அரைத்து, பல்லில் தேய்த்தாலும் வலி நீங்கும்.
வயிற்று வலி: வயிறு வலிக்கான காரணம், அதிகப்படியான உணவு சாப்பிடுவதும், உண்ட உணவு செரிக்காமல் இருப்பதுமேயாகும். வெற்றிலையில் உப்புச் சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்று வலி நீங்கும். வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்கும். உப்பு வாயுவை அகற்றும். இரண்டும் கலந்து உருவாகும் உமிழ்நீர்ப் பெருக்கால், செரிமானம் சரியாகும். இதனால் வயிற்று வலி தீரும்.

0 comments:

Post a Comment